Skip to content

புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

பிரேசிலின் தெற்கு பிராந்தியத்தில் உருவான புயலால் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதற்கிடையே குவாய்பா நகரில் புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் அங்குள்ள வணிக வளாகம் முன்பு நிறுவப்பட்டு இருந்த 114 அடி சுதந்திர தேவி மாதிரி சிலை சரிந்து விழுந்தது. இதில் அந்த சிலையின் தலை தரையில் மோதி துண்டுதுண்டாக உடைந்தது.

இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் அந்த பகுதியை பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். பின்னர் உடைந்த பாகங்களை மீட்பு படையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
முதலில் சிலை விழுந்த வீடியோவை ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாகவே பலரும் நினைத்தனர். ஆனால் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலான நிலையில் அது உண்மை தான் என பலரும் அதிர்ச்சி தெரிவித்தனர். இவ்வளவு உறுதியான சிலை எப்படி காற்றில் விழுந்திருக்கும் என பலரும் கேள்வி எழுப்பினர். ஆனால் பிரேசில் நாட்டின் அமலில் உள்ள தொழில்நுட்ப தர நிலைகளை கருத்தில் கொண்டு தான் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சிலை அசைய தொடங்கியதும் உடனடியாக அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சிலை உடைந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. வானிலை தவிர்த்து வேறு எதாவது காரணம் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

error: Content is protected !!