சென்னை : ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களின் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது. சம ஊதியம், பணி நிரந்தரம், ஓய்வூதிய உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிண்டி எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் செவிலியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டம் தொடங்கியதிலிருந்து ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்துகொண்டு, வெயில், மழை என எந்த வானிலையிலும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போராட்ட குழுவினருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களின் கோரிக்கைகளை கவனமாகக் கேட்டறிந்த அமைச்சர், அரசின் நிலைப்பாட்டை விளக்கினார்.பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஒப்பந்த பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ஏற்கனவே 3,614 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். மேலும், 1,200 செவிலியர்கள் 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.169 பேருக்கு உடனடி நிரந்தர பணியாணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 750 பேருக்கு புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சீனியாரிட்டி அடிப்படையில் பணி ஆணைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதி அளித்தார்.
இந்த அறிவிப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளன.இருப்பினும், போராட்டம் முழுமையாக திரும்பப் பெறப்படுமா அல்லது தொடருமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். இந்தப் பேச்சுவார்த்தை மூலம் அரசும் செவிலியர்களும் ஒரு பொதுவான தீர்வை நோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிகிறது. மருத்துவத்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான செவிலியர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

