Skip to content

வெந்நீரில் விழுந்து 1½ வயது குழந்தை பலி

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா விஜயகிரி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா. இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் குழந்தையை குளிக்க வைப்பதற்காக ரம்யா வெந்நீர் வைத்துள்ளார். தண்ணீர் மிகவும் சூடாக இருந்துள்ளது.
இதனால் கொதிக்கும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனை ரம்யா கழிவறை அருகே வைத்துவிட்டு வீட்டுக்குள் துண்டை எடுக்க சென்றார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, வெந்நீர் இருந்த பாத்திரத்தின் அருகில் வந்துள்ளது. இதனை ரம்யா கவனிக்கவில்லை. இதனால் பாத்திரத்தை பிடித்து எழுந்த அந்த குழந்தை, எதிர்பாராதவிதமாக வெந்நீர் பாத்திரத்துக்குள் தவறி விழுந்தது.

அந்த பாத்திரத்தில் இருந்த தண்ணீர் கொதித்து கொண்டிருந்ததால் உள்ளே விழுந்ததும் உடல் வெந்து குழந்தை, பீறிட்டு கதறி அழுதது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரம்யா, ஓடி வந்தார். அப்போது வெந்நீர் பாத்திரத்துக்குள் குழந்தை உடல் வெந்து உயிருக்கு போராடியதை பார்த்து அதிர்ந்து போன அவர், உடனடியாக குழந்தையை மீட்டு உன்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக குழந்தை மைசூரு கே.ஆர். அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து உன்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!