தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், கூட்டணிகளை உறுதிப்படுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
அமித்ஷா வருகையும் புதுக்கோட்டை விழாவும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், இரண்டு நாள் பயணமாக அந்தமான் நிக்கோபாரில் இருந்து இன்று மாலை தனி விமானம் மூலம் திருச்சி வருகை தருகிறார். பின்னர் அவர் புதுக்கோட்டையில் நடைபெறும் ‘தமிழர் பயணம்’ நிறைவு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். முன்னதாக, இந்த விழா ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேதி மாற்றப்பட்டு இன்றே (ஜனவரி 4) நடைபெறுவதால், ஏற்கனவே சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் இன்று புதுக்கோட்டை விழாவில் கலந்துகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் இவ்விழாவில் பங்கேற்கிறார்.
திருச்சியில் முக்கிய சந்திப்பு:புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இன்று இரவு திருச்சி திரும்பும் அமித்ஷா, அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுக்கிறார். அதேபோல், சேலத்தில் தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியும் இன்று இரவு திருச்சி வந்தடைகிறார்.நாளை (ஜனவரி 5, திங்கள்கிழமை) காலை 10 மணி அளவில் அமித்ஷா திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர், அவர் தங்கியிருக்கும் ஓட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.
தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை:இந்தச் சந்திப்பின் போது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்தும், குறிப்பாக தொகுதிப் பங்கீடு குறித்தும் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது குறித்து அமித்ஷா அவர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் விரிவாக ஆலோசிப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.தமிழக அரசியலில் மிக முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படும் இந்தச் சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

