Skip to content

மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் – திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு விவரம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என்ற தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், எந்தவித நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மலை உச்சி தூணில் தீபம் ஏற்றலாம் எனக்கூறிய நீதிபதிகள் எத்தனை பேர் அனுமதிக்கப்படலாம் என்பது குறித்து தொல்லியல் துறையுடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்கலாம் என்று தெரிவித்திருப்பதாக ‘லைவ் லா’ இணையதள செய்தி கூறுகிறது.

லைவ் லா செய்தியின்படி, சமூகங்களுக்கு இடையேயான இடைவெளியை மத்தியஸ்தம் மூலம் தீர்ப்பதற்கான பாலமாக மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டார்.

அதன்படி, டிசம்பர் 3 மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலர் டிசம்பர் 2 அன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஆனால், டிசம்பர் 3 அன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வழக்கம் போல தீபம் ஏற்றப்படும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தீபத்தூணில் தீபத்தை ஏற்றுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை (டிசம்பர் 3) தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட ஆட்சியர், நகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் செயல் அதிகாரி ஆகியோர் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக டிசம்பர் 4 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மறுபுறம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம், மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியவை மேல் முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!