திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையம் , கலையரங்க மண்டபம், மொராய் சிட்டி, மணப்பாறை, சோமரசம்பேட்டை, முசிறி, தில்லைநகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தனியார் பொருட்காட்சிகள் நடத்தப்பட்டன. இவைகளுக்கு அனுமதி வழங்கியது மற்றும் எத்தனை நாள் பொருட்காட்சி நடைபெற்றது என்பதில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அரசு பொருட்காட்சியோ, தனியார் பொருட்காட்சியோ தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி (பொருட்காட்சி) துறை சார்பிலேயே அதாவது அவர்களின் அனுமதியின் அடிப்படையிலேயே நடத்தப்படுவது வழக்கம். இந்த பொருட்காடசிகளுக்கு மாவட்டங்களின் நிலைகளை கருத்தில் கொண்டு மாநாகராட்சி, நகராட்சி, பேருராட்சி ஆகிய பகுதிகளை கருத்தில் கொண்டு நாள் ஒன்றுக்கு கட்டணம் வசூல் செய்வது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நுழைவுக்கட்டணம் கூடிய தனியார் பொருட்காட்சிக்கு நாள் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாயும், உள் அரங்கத்திற்கு 4 ஆயிரம் ரூபாயும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே எத்தனை நாட்கள் பொருட்காட்சி நடத்தப்படும் என்கிற கட்டுப்பாட்டின் அடிப்படையில் பணத்தை அதாவது 15 நாட்களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை டிடி எடுத்து அனுமதி கேட்க வேண்டும். தனியார் பொருட்காட்சிக்கு திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை பரிந்துறையின் படியே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 15 நாட்கள் நடக்கும் பொருட்காட்சிக்கு 10 நாட்கள் மட்டுமே பணம் கட்டிவிட்டு, அதிகாரிகளை கவனித்துவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் திருச்சியில் நடத்தப்பட்ட பொருட்காட்சிகளில் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே பணம் கட்டிவிட்டு கூடுதலாக தனியார் நிறுவனங்கள் , பொருட்காட்சிகளை நடத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் செய்தித்துறை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

