உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்று நள்ளிரவு இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் மொத்தம் 216 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பறவை ஒன்று விமானத்தின் மீது பலமாக மோதியது. இதில் விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
பறவை மோதியதால் விமானத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, பயணிகளின் பாதுகாப்பைக் கருதி உடனடியாக விமானத்தைத் தரையிறக்க முடிவு செய்தார். அருகே இருந்த வாரணாசி விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு அவசர கால அனுமதி கோரினார். அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று, வாரணாசி விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் அதிலிருந்த 216 பயணிகளும் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சில பயணிகள் மாற்று விமானங்கள் மூலம் பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற பயணிகளுக்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனம் செய்தது.
சரியான நேரத்தில் விமானி எடுத்த துரித நடவடிக்கையாலேயே பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

