திருச்சி மாவட்டத்தில் இரவு பகல் என இடைவிடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது நேற்று காலையிலிருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாலையில் திருச்சி மாநகரில் கனமழை கொட்டி தீர்த்தது. மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை திருச்சி ஜங்ஷன் பகுதியில் பலத்த மழை பெய்தது இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மழையின் காரணமாக மத்திய பஸ் நிலையம் சத்திரம் பஸ் நிலையம் தில்லை நகர் அண்ணா நகர் உழவர் சந்தை கண்டோன்மென்ட் ஊரையூர் வயலூர் புத்தூர் கரூர் பைபாஸ் என மாநகரப் பகுதியில்

பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் பெரும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனர் திருச்சி மாநகரம் மட்டுமல்லாமல் திருவெறும்பூர் மணப்பாறை மண்ணச்சநல்லூர் உறையூர், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
பள்ளி கல்லூரிகளுக்கு சென்று திரும்பி மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு சென்ற பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர் பின்னர் சாரல் மழை விடிய விடிய பெய்தது இன்று காலையிலும் சாரல் மழை பெய்தது. ஏற்கனவே கடும் குளிரில் அவதிப்பட்டு வரும் திருச்சி வாசிகள் நேற்று பெய்த மழையினால் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு என் எஸ் பி ரோடு யானைக்கட்டி மைதானம் மேற்கு புளி வார்டு ரோடு போன்ற பகுதிகளில் சாலையோர வியாபாரிகள் பெரும் நம்பிக்கையுடன் கடைகள் அமைத்திருந்தனர். ஆனால் மழையினால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் நடமாடும் உணவுகள் மற்றும் சாலையோர கடைகள் மழை காரணமாக பல இடங்களில் திறக்கப்படவில்லை.இது மட்டுமின்றி பொங்கல் வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ,மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக திருச்சியில் பரவலாக பெய்து வரும் தொடர் மழையினால் திருச்சி முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள சிம்சன் – 2 ரேஷன் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்தது.மேற்கூரை விழுந்ததால் ரேஷன் கடையில் உள்ள பொருட்கள் பாதிக்கப்பட்டன.பொருள்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்து சிதறி கிடக்கிறது.இரவு நேரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ரேஷன் கடையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தொடர் மலைக்கு சாலைகளும் சேதமடைந்துள்ளன.இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.எனவே பொதுமக்கள் வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

