தஞ்சாவூர் மாவட்டம் தென்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிலம்பரசன். இவரது மனைவி சரண்யா (25). இவர்களது ஒன்றரை வயது மகன் யாசின், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தவறுதலாக ‘சாட்டை வெடியை’ தின்றதால், சிகிச்சைக்காக தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
குழந்தைக்கு சிகிச்சை முடிந்து, இன்று வீடு திரும்புவதற்கான டிஸ்சார்ஜ் (Discharge) நடைமுறைகளுக்காக சரண்யா காத்திருந்தார். வார்டில் உள்ள படுக்கையில் அமர்ந்திருந்தபோது, எதிர்பாராத விதமாக மேல்புறக் கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து சரண்யாவின் தலையில் விழுந்தது.இதில் பலத்த காயமடைந்த சரண்யா, உடனடியாக அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மட்டுமின்றி திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் சிகிச்சைக்காக நாடும் இந்த மருத்துவமனையில், கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

