Skip to content

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: ‘ரயில் ஒன்’ செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் 3% சலுகை – நாளை முதல் அமல்

ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களில் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையிலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், ‘ரயில் ஒன்’ (Rail One) செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டணச் சலுகையை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

ரயில்வே துறையில் தனித்தனியாக இருந்த ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC), யூ.டி.எஸ் (UTS), என்.டி.இ.எஸ் (NTES) போன்ற பல்வேறு செயலிகளை ஒருங்கிணைத்து ‘ரயில் ஒன்’ என்ற புதிய செயலியை ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதன் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட், பிளாட்பார டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகளைப் பெற முடியும். மேலும், ரயில்கள் வரும் நேரம் மற்றும் புகார்களைப் பதிவு செய்யும் வசதிகளும் இதில் உள்ளன.

முன்பு கியூ.ஆர். கோடு (QR Code) மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த 3 சதவீத கட்டணச் சலுகை, தற்போது ‘ரயில் ஒன்’ செயலி மூலம் டிஜிட்டல் முறையில் டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தச் சலுகை நாளை தொடங்கி வரும் ஜூலை மாதம் 14-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதேபோல், ஆர்-வாலட் (R-Wallet) மூலம் பணம் செலுத்தி 3 சதவீத போனஸ் பெறும் பழைய நடைமுறையிலும் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னக ரயில்வேயில் தற்போது 29.5 சதவீத பயணிகள் செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுத்து வரும் நிலையில், இதனை மேலும் அதிகரிக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. எனவே, சாதாரண டிக்கெட்டுகளுக்கு ‘யூ.டி.எஸ்’ செயலியைப் பயன்படுத்துபவர்கள் இனி ‘ரயில் ஒன்’ செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் டிக்கெட் எடுப்பதில் ஏற்படும் தொழில்நுட்பத் சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்றும், டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து அபராதம் கட்டுவதிலிருந்து தப்பிக்கலாம் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!