விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் 07.01.2026 முதல் 31.01.2026 வரையிலான அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் வாயிலாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் 07.01.2026 முதல் 31.01.2026 வரையிலான அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் நடைபெறும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுநாள் வரையில் விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக வழங்கப்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் ஆனது ஆன்லைன் வழியாக பதிவு மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிட அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமமின்றி சென்றடையும் வகையில் 31.01.2026 வரையிலான அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து 15 நாட்களுக்கு விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஆன்லைன் வழியாக இலவச பஸ் பாஸ் வழங்கிடும் முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண சலுகை அட்டை புதுப்பித்தல், பலவகை மாற்றுத்திறனாளிகள் வேலைக்கு செல்வோர், கல்லூரிகளுக்கு செல்லும் மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்கள், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லும் மாற்றுத்திறனாளிகள், அறிவுசார் குறைபாடுடையோர் இருவர் பயணம் ஆகியோர்களுக்கு பஸ் பாஸ் புதுப்பித்தல் மற்றும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படவுள்ளது.
மேற்கண்ட முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆன்லைன் பஸ் பாஸ் புதுப்பிக்க மற்றும் பதிவு செய்திட UDID, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மருத்துவசான்று, பணிபுரியும் நிறுவனத்தின் (2026-2027) ஆண்டிற்கான பணிச்சான்று, மருத்துவமனையின் மருத்துவ அலுவலரின் சான்று, கல்வி நிறுவனத்தின் Bonafide சான்று, ஆதார் அட்டை ஆகியவைகளின் அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்-1 ஆகியவற்றைக் கொண்டு வந்து பயன் பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இதன் தொடர்பான விவரம் ஏதேனும் தேவைப்படும் எனில் விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தொலைபேசி எண் 04146- 290543 -யை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.

