தஞ்சாவூர்: 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் உள்ள மிக பழமையான மருத்துவமனை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாகும். இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1,172 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொது மருத்துவம், மூளை நரம்பியல், சிறுநீரகத்துறை, இதய அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத்துறை, முடநீக்கியல்துறை, மனநல மருத்துவம், மயக்கவியல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் உள்ளன.
தஞ்சை மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, திருவா’ரூர், மயிலாடுதுறை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக தினமும் ஏராளமானோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். உள்நோயாளியாக சேர்ந்தும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இவருக்கு துணையாக அவரது 15 வயது தங்கச்சி மருத்துவமனையில் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் 15ம் தேதி பணியில் இருந்த டாக்டர் சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் பகுதியை சேர்ந்த எம். கோபிநாத் (35) என்பவர் பணியில் இருந்தார். (இவர் எம்.எஸ்.முடித்து மேற்படிப்பு படித்து வந்த மருத்துவ மாணவர்)
டாக்டர் கோபிநாத் வார்ட்டில் தனியாக படுத்து இருந்த அந்த 15 வயது சிறுமியை பார்த்துள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டு அலறியதால் டாக்டர் கோபிநாத் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மனஉளைச்சலுக்கு உள்ளான அந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து அழுதுள்ளார். உடன் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் டாக்டர் கோபிநாத் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டாக்டர் கோபிநாத்தை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு செவிலியர் ஒருவருக்கும் டாக்டர் கோபிநாத் பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

