இந்தியாவின் வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கடும் குளிரும், அடர்ந்த பனிமூட்டமும் நிலவி வருகிறது. இதனால் பகல் நேரங்களிலேயே சாலைகள் சரிவரத் தெரியாத சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், இன்று காலை பரேலி மாவட்டத்தில் உள்ள டெல்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன.
கோரக்பூரில் இருந்து மீரட் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, முன்னால் சென்ற லாரியின் மீது பலமாக மோதியது. இதன் தொடர்ச்சியாக, பின்னால் வந்த 3 பேருந்துகள் மற்றும் பல கார்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதி நின்றன. இந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 24 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. லேசான காயமடைந்தவர்கள் முதலுதவிக்குப் பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து காரணமாகச் சில மணி நேரம் பாதிக்கப்பட்ட போக்குவரத்து, போலீசாரின் துரித நடவடிக்கைக்குப் பின் சீரானது. கடும் பனிமூட்டம் நிலவும் நேரங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

