Skip to content

முடிந்தது பொங்கல் விடுமுறை: பேருந்து நிலையங்களில் குவியும் கூட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படுவதால், நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்புவோரின் கூட்டம் இன்று உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 14-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட 5 நாள் விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, சொந்த ஊர் வந்த மக்கள் நேற்று முதலே மீண்டும் தாங்கள் பணிபுரியும் ஊர்களுக்குப் புறப்படத் தொடங்கினர். இன்று காலை முதலே நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சென்னைக்கு இயக்கப்படும் வழக்கமான ரயில்களில் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்டுகள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. குறிப்பாக, அந்தியோதயா மற்றும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க, பயணிகள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இட நெருக்கடி காரணமாகப் பயணிகள் ரயில்களின் நடைபாதை மற்றும் படிக்கட்டு பகுதிகளில் அமர்ந்து பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் நெல்லையிலிருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூர் மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்குப் பெரும் எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நெல்லை மட்டுமல்லாது நாகர்கோவில், மதுரை, திருச்சி மற்றும் திண்டுக்கல் பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாளை காலை அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், இன்று இரவு வரை இந்தப் பயணிகள் கூட்டம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!