தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 97 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 66 லட்சம் பேர் இடம் மாறிச் சென்றவர்களாகக் காட்டப்பட்ட நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைச் சேர்க்க கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த பணிகளில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்கள் தீவிரமாக ஈடுபட்டு, தகுதியுள்ளவர்களிடம் படிவம் 6-ஐப் பெற்று அதிகாரிகளிடம் சமர்ப்பித்தனர். புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்க நேற்று (ஜனவரி 18) வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலமாக இதுவரை சுமார் 13.03 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். அதேபோல், இறந்தவர்களின் பெயர்களை நீக்க 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படிவம் 7-ஐ அளித்துள்ளனர்.
முதலில் பிப்ரவரி 17-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், பெயர் சேர்க்க விடுபட்டவர்களுக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, பெயர் சேர்க்கும் பணிகளுக்கான அவகாசத்தை வரும் ஜனவரி 30-ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

