மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் அவர்கள் தலைமையில், இன்று 23.01.2026 (வெள்ளிக் கிழமை) காலை 10 மணி அளவில், தலைமைக் கழகம் தாயகத்தில் நடைபெற்றது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ கருத்துரை வழங்கினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் -1:
1986 ஆம் ஆண்டு முதல் 10 நடை பயணங்களை மேற்கொண்டு, தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், உரிமைகளை மீட்கவும் தன் பொற்பாதங்களால் மண்ணளந்த தாளாளர் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தனது 11 ஆவது நடை பயணத்தை “சமத்துவ நடை பயணம்“ என்று அறிவித்து, 2026 ஜனவரி 2 ஆம் தேதி திருச்சியில் தொடங்கி 11 நாட்கள், 180 கி.மீ. நடந்து ஜனவரி 12 ஆம் நாள் மதுரையில் நிறைவு செய்தார்.
தனது 82 அகவையிலும் தளராத உறுதியுடன் தமிழ்நாட்டின் மேன்மைக்காக நடை பயணத்தை மேற்கொண்ட திராவிட இயக்கப் போர்வாள், கழகப் பொதுச் செயலாளர், வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
“சாதி சமய நல்லிணக்கம் தழைத்து ஓங்க வேண்டும்;” “இந்துத்துவ சனாதன சக்திகளை வீழ்த்தி, திராவிட இயக்க ஆட்சி தொடர வேண்டும்”. “போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”. ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து தமிழக மக்களின் பேராதரவுடன் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மேற்கொண்ட சமத்துவ நடை பயணத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு பெரிதும் துணை நின்ற கழகத்தின் முதன்மை செயலாளர் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நபையணத்தில் பங்கேற்ற தொண்டர் அணியினர், மாணவர் அணியினர், இளைஞர் அணியினர், ஆபத்துதவிகள் அணியினர் மற்றும் கழக நிர்வாகிகள், நடைபயணத்தில் பங்கேற்ற கழகக் கண்மணிகள் அனைவருக்கும் இக்கூட்டம் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
நடைபயணத்தை திருச்சியில் தொடங்கி வைத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நடை பயண விளக்கப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாழ்த்திய தோழமை கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் -2:
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி கூடியது. தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி ,பேரவை மரபின் படி மாநில அரசு தயாரித்து அளித்திருக்கும் கவர்னர் உரையை வாசிக்காமல் தேசிய கீதம் இசைக்கப்பட வில்லை என்ற வழக்கமான காரணத்தைக் கூறி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 176-இன்படி, கவர்னர் உரை என்பது மாநில அரசால் தயாரிக்கப்பட்டு, கவர்னரால் முழுமையாகப் படிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். பேரவையில் ஆற்றும் உரையில், கவர்னர் தமது சொந்தக் கருத்துக்களைத் தெரிவிக்கவோ, மாநில அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையில் நீக்கம் செய்வதற்கோ அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை.
கவர்னர் ஜனவரி 19 அன்று சில விளக்கங்களைக் குறிப்பிட்டு அரசுக்கு கடிதம் எழுதியதைத் தொ டர்ந்து அவருக்கு அதற்கான பதிலும் அரசின் சார்பில் அளிக்கப்பட்டது. ஆனாலும் கவர்னர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையின் மரபையும் மாண்பையும் துச்சமாகக் கருதி பேரவையில் தனது அரசியல் சட்டக் கடமையை ஆற்றாமல் வெளியேறியது கண்டனத்திற்குரியதாகும்.
கவர்னரின் செயலுக்கு விளக்கம் அளித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டது போல தமிழ்நாடு அரசின் மீது குற்றச்சாட்டுக்கள் புனையப்பட்டிருந்தன. பேரறிஞர் அண்ணா அவர்கள் 1953 ஆம் ஆண்டு குறிப்பிட்டவாறு , கவர்னர் பதவி தேவையா? என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர்களின் துணை கொண்டு மாநில அரசுகளை இயங்க விடாமல் மத்திய பாஜக அரசு முடக்கி வருகிறது.
கேரள சட்டமன்றத்தில் கவர்னர் ராஜேந்திர அர்லேகர், மத்திய அரசுக்கு எதிரான வார்த்தைகளை தன்னிச்சையாகவே நீக்கி வாசித்து, அரசியலமைப்புச் சட்டக் கடமையை மீறியுள்ளார். கர்நாடக மாநிலத்திலும் இதுதான் நடந்தது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டியவாறு கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்க வேண்டுமா? என்பது குறித்து ஒத்த கருத்துடைய மாநில கட்சிகளுடன் கலந்து பேசி அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதுடன் கவர்னர் பதவியை இரத்து செய்வதற்கும் முயற்சிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் -3:
மயிலாடுதுறை மாவட்டம், பெருமாள்பேட்டை தேவராஜ் உள்ளிட்ட 4 மீனவர்களும், சீர்காழி வானகிரி ராஜேஷ் உள்ளிட்ட 3 மீனவர்களும் தனித்தனியே இரண்டு கண்ணாடியிழைப் படகுகளில் நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து செவ்வாய்க்கிழமை மதியம் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.
இவர்கள் 7 பேரும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் ஜனவரி 21 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களது 2 படகுகளையும் சிங்கள கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைதான மீனவர்கள் 7 பேரையும் காங்கேசன்துறை முகாமில் வைத்து இலங்கை படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, கடந்த நவ.,10ஆம் தேதி ராமே°வரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 21 மீனவர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து நவ.,12ஆம் தேதி நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்டு, அவர்களின் மூன்று விசை படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
டிசம்பர் 28 ஆம் தேதி மண்டபம் பகுதியை சேர்ந்த மூன்று மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அவர்களை கைது செய்த இலங்கை கடற்படை, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று, அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப் பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களை ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 90 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மொத்தம் 254 மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், மீன் பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் நிகழ்வுகள் ஆகிவிட்டதை மத்திய அரசு வேடிக்கைப் பார்ப்பது மீனவர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது. உடனடியாக மத்திய அரசு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும் பறிமுதல் செய்யப்பட்ட மீன் பிடி படகுகளை மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ள மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகிறது.
தீர்மானம் -4:
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், அவற்றுக்கு உட்பட்ட கல்லூரிகள் ஆகியவற்றின் உயர் கல்வியை நிர்வகிக்க – பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ), தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்சிடிஇ) ஆகிய அமைப்புகள் செயல்படுகின்றன.
தனித்தனியாகச் செயல்படும் இவற்றைக் கலைத்துவிட்டு, அனைத்து உயர் கல்விச் செயல்பாடுகளையும் இந்திய உயர் கல்வி ஆணையத்தின்கீழ் (Higher Education Commission of India – HECI) கொண்டுவர ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதில் மருத்துவம், சட்டக் கல்லூரிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ முதலான உயர் கல்விக்கான ஒன்றிய அரசின் அமைப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து ‘இந்திய உயர் கல்வி ஆணைய மசோதா 2025’ எனும் மசோதா ‘விக்சித் பாரத் சிக்க்ஷா ஆதிஷ்டான்’ என்ற பெயரில் நாடாளுமன்ற மக்களவையில் 2025 டிசம்பர் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அது நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
இந்த சட்ட மசோதா தற்போதுள்ள
(i) பல்கலைக்கழக மானியக் குழு (UGC),
(ii) அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), மற்றும்
(iii) தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) ஆகியவற்றை உருவாக்கிய மூன்று சட்டங்களையும் ரத்து செய்கிறது.’ என்ற ஆணையம் நிறுவப்படும்.
இந்த மசோதா உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. ஆணையம் உருவாக்கும் ஒவ்வொரு தரநிலை ஒழுங்குமுறைக்கும் ஒன்றிய அரசின் முன்அனுமதி அவசியம். இது ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) உள்ள நிலையை மீறுவதோடு, மாநில அரசுகள் நடத்தும் பெரும்பான்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே மோதலும் முரண்பாடும் ஏற்படச் செய்யும்.
இனி 130 கோடி மக்களின் உயர்கல்வி அனைத்திற்கும் ஒற்றை ஆணையம். இந்திய உயர்கல்வி நிலையங்கள் அனைத்தும் நேரிடையாக ஒன்றிய அரசின் கீழ் சென்றுவிடும் . இனி, மாநில அரசுகளுக்கும், உயர்கல்விக்கும் எந்த உறவும் இல்லை. மாநில அரசின் இறையாண்மை என்று ஒன்று இல்லவேயில்லை. இனி ஏட்டளவில் மட்டுமே இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும்.
கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து ,பேராபத்தை விளைவிக்கும் இந்திய உயர் கல்வி மசோதாவை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தீவிரமான போராட்டத்தை முன்னெடுக்க அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் மறுமலர்ச்சி திமுக அறைகூவல் விடுக்கிறது.
தீர்மானம் -5:
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் -2026 , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க கீழ் கண்டவாறு குழு அமைக்கப்படுகிறது.
- தி.மு.இராசேந்திரன், துணைப் பொதுச் செயலாளர்
- ஆ.வந்தியத்தேவன், கொள்கை விளக்க அணிச் செயலாளர்
- சூரி.நந்தகோபால், சட்டத் துறைச் செயலாளர்
- இரா.செந்தில்செல்வன், தணிக்கைக் குழு உறுப்பினர்
- காரை செல்வராஜ், இலக்கிய அணிச் செயலாளர்
- ப.த.ஆசைத்தம்பி, இளைஞர் அணிச் செயலாளர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

