ராஜஸ்தான் மாநிலத்தில் வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் இருவர், சிறையில் காதல் வயப்பட்டுத் திருமணம் செய்து கொள்ள பரோலில் விடுவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரியா சேத் (34), கடந்த 2018-ம் ஆண்டு டேட்டிங் செயலி மூலம் பழகிய துஷ்யந்த் சர்மா என்பவரைக் கொலை செய்து, உடலைச் சூட்கேஸில் அடைத்து வீசிய வழக்கில் கைதானவர். அதேபோல், அல்வார் பகுதியைச் சேர்ந்த அனுமார் பிரசாத் (29), கடந்த 2017-ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைத் துடிதுடிக்கக் கொலை செய்த வழக்கில் கைதானவர். இவர்கள் இருவருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
தண்டனைக் காலத்தின் போது சங்கனேரில் உள்ள திறந்தவெளிச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக பரோல் கோரி விண்ணப்பித்த நிலையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அவர்களுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை சிறையிலிருந்து வெளியே வந்த இந்த ஜோடிக்கு, அனுமார் பிரசாத்தின் சொந்த ஊரான பரோடாமியோவில் இன்று திருமணம் நடைபெறுகிறது. இது குறித்துக் கைதிகளின் வழக்கறிஞர் கூறுகையில், நீதிமன்ற விதிமுறைகளின் படியே இந்த பரோல் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதே சமயம், இந்தத் திருமணத்திற்குப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரியா சேத் தரப்பு வழக்கறிஞர் சந்தீப் லோஹாரியா கூறுகையில், தங்களுக்குத் தெரிவிக்காமலேயே பரோல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கொலைக் குற்றவாளிகள் இருவர் சிறையில் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் இந்தச் சம்பவம் ராஜஸ்தானில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

