தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள நிலையில், உயர்கல்வித் துறை அமைச்சரைத் தொடர்ந்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவைப் புறக்கணித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே நீண்டகாலமாக இழுபறி நீடித்து வருகிறது. ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா அல்லது மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்ற சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதனிடையே, தமிழக அரசின் கொள்கைகளுக்கும், கலாச்சாரத்திற்கும் எதிராக ஆளுநர் பேசி வருவதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 22-ம் தேதி நடைபெற்ற சென்னை பல்கலைக்கழகத்தின் 167-வது பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார். “மாணவர்களுக்குப் பட்டம் வழங்க ஆளுநருக்குத் தகுதி இல்லை” என அவர் விமர்சித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை வேப்பேரியில் நடைபெற்ற தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவிலும் இதே நிலை நீடித்தது. இவ்விழாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி 699 மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவிற்கான அழைப்பிதழில், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், ஆளுநரின் போக்கைக் கண்டிக்கும் வகையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வெளியேறியது முதல், பட்டமளிப்பு விழாக்கள் வரை ஆளுநருக்கு எதிரான அரசின் எதிர்ப்பு வலுத்து வருகிறது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆளுநருக்குப் பதிலடி கொடுத்து வந்த நிலையில், தற்போதுள்ள அமைச்சர்களும் அதே பாதையைப் பின்பற்றுவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

