அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு உலகின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் அமேசான், தனது 30 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குக் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் (AI) அசுர வளர்ச்சி போன்ற காரணங்களால் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், அமேசான் நிறுவனமும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 27,000 ஊழியர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி சுமார் 14,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டன.
இந்தத் தொடர் நடவடிக்கைகளின் உச்சகட்டமாக, தற்போது மொத்தம் 30,000 கார்ப்பரேட் பணியிடங்களை முழுமையாக ரத்து செய்ய அமேசான் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் 27-ம் தேதி முதல் சுமார் 14,000 முதல் 16,000 வரையிலான ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி பணிநீக்க நடவடிக்கையால் அமேசான் வெப் சர்வீசஸ், ரீடைல், பிரைம் வீடியோ மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகிய முக்கியப் பிரிவுகளில் பணியாற்றும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. லாபத்தை அதிகப்படுத்தவும் நிர்வாகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது தகவல் தொழில்நுட்பத் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

