அமெரிக்காவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் வீசவுள்ள கடுமையான பனிப்புயல் காரணமாக, இந்தியாவிலிருந்து நியூயார்க் மற்றும் நியூவார்க் நகரங்களுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது. வழக்கமாக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து தினசரி அடிப்படையில் நியூயார்க் நகரிற்கும், வாரத்தின் சில நாட்களில் நியூவார்க் நகரிற்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 25, 26) ஆகிய இரண்டு தினங்களுக்கு இந்த நகரங்களுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா தனது எக்ஸ் வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவை இந்த வார இறுதியில் தாக்கவுள்ள வரலாறு காணாத பனிப்புயல் மற்றும் தீவிர குளிரலையினால் அந்நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த பனிப்புயலானது டெக்சாஸ் மாகாணத்தில் தொடங்கி நியூ இங்கிலாந்து வரை சுமார் 2,000 மைல்கள் நீளத்திற்குப் பரவி, கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தும் என முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்காவின் அலபாமா, ஜார்ஜியா, லூசியானா, மேரிலேண்ட் உள்ளிட்ட 15 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பனிப்புயல் கிழக்கு நோக்கி நகரத் தொடங்குவதால், திங்கட்கிழமை வரை விமானப் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏர் இந்தியா எடுத்துள்ள இந்த முடிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் குறித்து நிறுவனம் தகவல் அளித்து வருகிறது.

