Skip to content

33 லட்சம் ரசிகர்கள் அதிர்ச்சி: அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட இளம் இன்ஸ்டா பிரபலம்

இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரபல சமூக வலைதள இன்ப்ளுயன்சர் லூலா லஹ்பா, ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான லூலா லஹ்பா, இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக் செயலிகளில் சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டு மிகவும் பிரபலமாக விளங்கியவர். இவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பிரபல யூடியூபர் மற்றும் இசைக்கலைஞரான ரெசா ஒக்டோவியன் என்பவரைக் காதலித்து வந்தார். இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த புத்தாண்டு சமயத்தில் சிறுநீரகக் கல் பாதிப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக லூலா லஹ்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று தெற்கு ஜகார்த்தாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவர் சடலமாகக் கிடப்பதைப் பாதுகாப்பு பணியாளர்கள் கண்டறிந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். லூலா லஹ்பாவின் மரணம் குறித்த செய்தி வெளியாவதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பாக, அவரது காதலரான ரெசா ஒக்டோவியனின் இசைக்குழு தனது நிகழ்ச்சியைத் திடீரென ரத்து செய்தது. இது குறித்து அந்த இசைக்குழு வெளியிட்ட அறிவிப்பில், குழுவில் உள்ள ஒருவருக்குத் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துவிட்டதால், அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மனநிலையில் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லூலா லஹ்பாவின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், அவர் சமீபத்தில் சிகிச்சை பெற்ற மருத்துவ அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். திருமணக் கனவில் இருந்த இளம் இன்ப்ளுயன்சர் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!