Skip to content

77 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (24). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 77 வயது மூதாட்டியின் வீட்டிற்குச் சென்ற அஜித்குமார், மது குடிக்கப் பணம் கேட்டுள்ளார். மூதாட்டி பணம் இல்லை என்று கூறியதால் ஆத்திரமடைந்த அஜித்குமார், போதையில் அவரைத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மூதாட்டி மயக்கமடைந்ததால், அவர் இறந்துவிட்டதாக நினைத்து அஜித்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மறுநாள் காலை மூதாட்டி காயங்களுடன் இருப்பதைப் பார்த்த உறவினர்கள், அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆரம்பத்தில் பயத்தின் காரணமாக அஜித்குமார் தன்னைத் தாக்கியதாக மட்டும் மூதாட்டி கூறியுள்ளார். ஆனால் வீட்டிற்குத் திரும்பிய பிறகு உடல் வலியால் துடித்த அவர், நள்ளிரவில் பயந்து அலறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவரது மகள் விபரம் கேட்கவே, அஜித்குமார் தன்னை நகத்தால் கீறி பாலியல் வன்கொடுமை செய்ததை மூதாட்டி அழுதுகொண்டே தெரிவித்துள்ளார்.

உடனடியாக மூதாட்டி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்துத் தகவல் அறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் உத்தரவின் பேரில், தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரைக் கைது செய்தனர். மதுபோதையில் மூதாட்டிக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!