இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்திய-பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா பகுதியில் குடியரசு தின சிறப்பு கொடியிறக்க நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள வாகா பகுதியும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள அட்டாரி பகுதியும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இடமாகும். ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழா நாட்களில், இந்த எல்லையில் இரு நாட்டு வீரர்களும் பங்கேற்கும் கொடியேற்றம் மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சிகள் உலகப் புகழ்பெற்றவை.
இன்று நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவையொட்டி, இந்திய எல்லை பாதுகாப்பு படை (BSF) வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. வீரர்களின் கம்பீரமான நடை மற்றும் சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு ராணுவ வீரர்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர்.
இந்தக் கண்கவர் நிகழ்வைக் காண இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அட்டாரி எல்லைப் பகுதியில் திரண்டிருந்தனர். விழா நடைபெற்ற மைதானம் முழுவதும் மூவர்ணக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பின்போது, திரண்டிருந்த மக்கள் ‘ஜெய் ஹிந்த்’ மற்றும் ‘வந்தே மாதரம்’ போன்ற தேசபக்தி முழக்கங்களை எழுப்பினர். மக்களின் உற்சாக முழக்கங்களால் அந்தப் பகுதியே அதிரும் வகையில் தேசபக்தி உணர்வு மேலோங்கி காணப்பட்டது. இறுதியில், இரு நாடுகளின் தேசியக் கொடிகளும் முறைப்படி இறக்கப்பட்டு, இன்றைய குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் இனிதே நிறைவடைந்தன.

