பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள பசிலன் மாகாணத்தில், சுமார் 300 பயணிகளுடன் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்போவங்கா நகரில் இருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவு நோக்கி இந்தப் படகு சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், கடலோர காவல் படையினர், கடற்படை கப்பல்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த மீன்பிடி படகுகள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கின. இந்தத் தீவிர மீட்பு நடவடிக்கையின் மூலம் 244 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக 13 பேரின் உடல்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
படகு விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிலிப்பைன்ஸில் அடிக்கடி ஏற்படும் புயல்கள், முறையாகப் பராமரிக்கப்படாத படகுகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் செல்லும் கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் இது போன்ற விபத்துகள் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

