சேலம் குரங்குசாவடி பகுதியில் நேற்றிரவு ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம் செய்த ஐந்து பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.
சேலம் சித்தனூர் புவனேஸ்வரி பகுதியைச் சேர்ந்த சக்திஅனீஷ் (32), நேற்று மாலை தனது மனைவி கீர்த்தனா, மகள் எஸ்னா, தாய் கமலா மற்றும் சகோதரி மோனிகா ஆகியோருடன் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் ஷோரூமிற்குச் சென்றுள்ளார். பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, குரங்குசாவடி பெட்ரோல் பங்க் அருகே காரின் இன்ஜின் பகுதியிலிருந்து திடீரென கரும் புகை வெளியேறியுள்ளது.
புகையைக் கண்டதும் சுதாரித்துக்கொண்ட சக்திஅனீஷ், உடனடியாக காரை நிறுத்திவிட்டு உள்ளே இருந்த தனது குடும்பத்தினர் அனைவரையும் கீழே இறக்கிவிட்டார். அவர்கள் அனைவரும் இறங்கிய சில நிமிடங்களிலேயே கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. முதற்கட்ட விசாரணையில், காரின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். உரிய நேரத்தில் காரை நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.

