Skip to content

நாமக்கல்லில் பயங்கர விபத்து: லாரி – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி 3 பேர் பலி

திருச்சியிலிருந்து சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி வந்த சரக்கு வாகனம், இன்று காலை 6 மணியளவில் நாமக்கல் – திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, பெங்களூரில் இருந்து நாமக்கல் வழியாக திருச்சி நோக்கிச் சென்ற லாரியும், அந்தச் சரக்கு வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.

மோதிய வேகத்தில் சரக்கு வாகனம் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த நாமக்கல் ஜெய் நகரைச் சேர்ந்த கார்த்தி (21), இந்திரா நகரைச் சேர்ந்த சேனாதிபதி (22) மற்றும் சரக்கு வாகன ஓட்டுநரான உசேன் (27) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும், இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு வாலிபர் மற்றும் லாரி ஓட்டுநர் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிகாலை நேரத்தில் மேம்பாலத்தில் இரு வாகனங்களும் அதிவேகமாக வந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!