ஆஸ்திரேலியாவைப் பின்பற்றி, கோவாவிலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பது குறித்து அம்மாநில அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
இளம் தலைமுறையினர் பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க, ஆஸ்திரேலிய அரசு அண்மையில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை விதித்ததுடன், விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 3 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருந்தது. இதேபோன்ற கட்டுப்பாடுகளை இந்தியாவிலும் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆராய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஆந்திராவைத் தொடர்ந்து கோவா மாநிலத்திலும் இந்த தடையைக் கொண்டுவர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாகப் பேசிய கோவா மாநில அமைச்சர் ராகுன் கவுன்டே, “சாத்தியக் கூறுகள் இருந்தால் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; இது குறித்த விரிவான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார். சிறுவர்களின் நலன் கருதி எடுக்கப்படவுள்ள இந்த முயற்சி குறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகம் இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

