தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் நார்டே டி சண்டாண்டர் மாகாணத்தில் இன்று ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 13 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் என மொத்தம் 15 பேர் பயணம் செய்துள்ளனர். புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, விமானம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 15 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்தில் கொலம்பியா மாகாணத்தின் கீழ்சபை உறுப்பினரான (எம்.பி.) குவிண்டெரோ மற்றும் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருந்த முக்கிய அரசியல் பிரமுகர் சால்சிடோ ஆகியோரும் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் ஒரே விபத்தில் உயிரிழந்த சம்பவம் கொலம்பியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், விபத்திற்கான துல்லியமான காரணம் குறித்து அந்நாட்டு விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

