Skip to content

கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி ஊழியர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக, 16 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்ட வருடாந்திர ஊதிய உயர்வை மீண்டும் 16 சதவீதமாக உயர்த்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் சேவையைத் தமிழக அரசே நேரடியாக ஏற்று நடத்தி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் மற்றும் 8 மணி நேர வேலை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். மேலும், பணியின் போது உயிரிழக்கும் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவியும், காப்பீட்டுத் தொகையாக ரூ.20 லட்சமும் வழங்க வேண்டும் என்றும், தீபாவளி ஊக்கத்தொகையாக ரூ.20,000 வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்துச் சங்கத்தின் பேரவை செயற்குழு உறுப்பினர் இருளாண்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா பெருந்தொற்று மற்றும் பேரிடர் காலங்களில் உயிரைப் பணையம் வைத்து 108 ஊழியர்கள் அயராது உழைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். முதலமைச்சர் அவர்கள் மற்ற அரசுத் துறைப் பணியாளர்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருவது போல, தங்களது கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்திலிருந்து முதலமைச்சர் இல்லத்தை நோக்கிப் பிரம்மாண்ட கோரிக்கை நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!