செங்கல்பட்டு தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தச் சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கிப் பழகிய நிலையில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். திடீரென காய்ச்சல் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 10 வார கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும், வெளியே தெரிந்தால் அவமானம் என்று கருதி போலீசாருக்குத் தெரிவிக்காமல், ரகசியமாக வீட்டிலேயே சிறுமியின் கருவைக் கலைக்க முயற்சி செய்துள்ளனர். இந்த முயற்சியின்போது சிறுமிக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்துபோன குடும்பத்தினர், அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிறுமியின் நிலைமை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் வைத்து முறையற்ற வகையில் கருக்கலைப்பு செய்ய முயன்றதால் ஏற்பட்ட அதிகப்படியான ரத்தப்போக்கே சிறுமியின் மரணத்திற்குப் பிரதான காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுமி கர்ப்பமானது கடந்த 4-ம் தேதியே தெரிந்தும், அது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கத் தவறிய தனியார் மருத்துவமனை நிர்வாகம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

