சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் உள்ள நாவலூர் ஏரியை ரூ.30 கோடி செலவில் புனரமைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய சுற்றுச்சூழல் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சுமார் 782 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஐ.டி. பூங்கா வளாகத்தில், வறண்டு போயிருந்த 33.43 ஏக்கர் பரப்பளவிலான நாவலூர் ஏரியைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி சிப்காட் நிறுவனம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சுற்றுச்சூழல் பூங்காவில் நடைப்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டும் பாதைகள், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதி, திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், பறவைகள் பார்வை மையம் மற்றும் திறந்தவெளி அரங்கம் போன்ற பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச்சூழல் அறிவு மையம், உணவகம், ஓய்வுக் குடில்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த முன்னெடுப்பின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐ.டி. பூங்காவில் பணியாற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இப்பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளின் தோற்றம் செழுமையடைந்துள்ளது.

