Skip to content

ஆஃப் பாயில், பச்சை முட்டை சாப்பிடுவதை தவிர்க்கவும்- சுகாதாரத்துறை அலர்ட்

சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக காகங்கள் அதிகளவில் உயிரிழந்து வந்த நிலையில், அவற்றுக்கு வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளில் ஆய்வு செய்தபோது, அவற்றுக்கு ஹெச்5என்1 கிருமி (H5N1 வைரஸ்) தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது.
அடையாறை சுற்றியுள்ள பகுதிகளில் காகங்கள் பறவை காய்ச்சலால் உயிரிழந்ததாக மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் உறுதி செய்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பறவை காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் சென்னை பெருநகர மாநகராட்சியும் இறந்த காகங்களை பாதுகாப்பான முறையில் புதைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பொது சுகாதாரத் துறை அறிக்கை

இந்த நிலையில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்புத் துறை வெளியிட்டுள்ள இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘பறவைக் காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதை அவற்றை உரிய பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியப்படுகிறது. இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி. உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகளாகும். இந்நோயானது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரிடையாகவும் தூய்மைக் கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்பு உள்ளது.

எனவே, இருமல், சளி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன்

பணிபுரியவும். ஏதேனும் ப்ளு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , அரசு மருத்துவமனை , மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

தங்கள் பகுதிகளில் அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் பொதுமக்கள் உடனே கால்நடை மருத்துவ துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கைகளை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு பொதுமக்கள் 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்’ எ்ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!