திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சியினருடனும் திமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக்குழு நேற்று முதல் பேச்சுவார்த்தையை தொடங்கி வருகிறது. நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி குறித்து பேச அண்ணா அறிவாலயம் வந்தனர். இன்று காலை மனித நேய மக்கள் கட்சி கூட்டணி குறித்து பேசி சென்றனர்.
இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அவைத் தலைவர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்தில்தீபன், உயர்நிலை குழு உறுப்பினர் ஜீவன் மற்றும் தேர்தல் பணி செயலாளர் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இக்குழுவினருடன் பேச்சுவார்த்தை குறித்து பேசுவதற்காக இன்று காலை மதிமுக பேச்சுவார்த்தைக்குழு அண்ணா அறிவாலயம் வந்தனர். மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி குறித்து பேசி சென்றவுடன் மதிமுகவுடன் திமுக பேச்சுவார்த்தைக்குழு தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை செய்தனர்.
பேச்சுவார்த்தை முடிந்த பின்பு வெளியே வந்த மதிமுக அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் நிருபர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எத்தனை தொகுதிகள் மதிமுகவிற்கு திமுக கூட்டணியில் தருவதாக கூறியுள்ளார்கள்; மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடுமா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அர்ஜுனராஜ் மதிமுக இந்தமுறை தனி சின்னத்தில் தான் போட்டியிடும். எத்தனை தொகுதிகள் என்று பின்னர் அறிவிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

