கோவை-சென்னை இடையே இயக்கப்பட உள்ளJ வந்தே பாரத் ரெயில், அடுத்த மாதம் இதனை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் சென்றடையும் என உத்தேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும் இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 12.10 மணிக்கு சென்றடையும்.
சென்னையில் இருந்து 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு கோவை வந்தடையும் என உத்தேச தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் ஜமீல் அகமது கூறியதாவது:- வந்தே பாரத் ரெயில் சேவை எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பகல் நேரத்தில் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயில் சேவையை போல் இரவிலும் படுக்கை வசதியுடன் கூடிய முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரெயில் சேவையையும் தொடங்க வேண்டும். கோவையில் இருந்து மதுரை, பெங்களூருவுக்கும் இரவு நேரங்களில் பாயிண்ட் டூ பாயிண்ட் முறையில் ரெயில் இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.