கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் ரவுண்டானா முதல் சுங்கககேட் வரை இன்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் – என் மக்கள் நடைபயண பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக கரூர் மாநகர் முழுவதும் பாஜக கொடிக்கம்பங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றச் சொல்லி, நேற்று மேயர் கவிதா கணேசன் உத்தரவிட்டிருந்தார். அந்த பேனர்கள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் அதே பகுதியில் இரண்டு பேனர்கள் வைக்கப்பட்ட நிலையில், நேரடியாக அப்பகுதிக்கு வந்த மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் அதிகாரிகளுடன் நேரில் வந்து ஆய்வில் ஈடுபட்டு
அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றுமாறு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து அந்த இரண்டு பிளக்ஸ் பேனர்களும் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. நேரடியாக அப்பகுதிக்கே வந்து பேனர்களை அகற்றச் சொல்லி மேயர் உத்தரவிட்டதை அடுத்து, அகற்றப்பட்ட பிளக்ஸ் பேனர்களை பறிமுதல் செய்து எடுத்துச் செல்ல ஆணையர் சரவணகுமார் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பிளக்ஸ் பேனர்கள் பறிமுதல் செய்து எடுத்து செல்லப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மேலும் கரூர் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் எனவும் அனைத்திற்கும் அபராதம் விதிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.