அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சா்கள், பொன்முடி உள்ளிட்ட முன்னாள் அமைச்சா்கள் மீதான ஊழல் வழக்குகள் அனைத்தும் மீண்டும் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வசம் விசாரணைக்கு ஒப்படைக்கப்படுவதாக தலைமை நீதிபதி கங்கா புா்வாலா அறிவித்துள்ளாா்.
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கீழமை விசாரணை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளை தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டாா். தமிழக உயா்கல்வித் துறை முன்னாள் அமைச்சா் பொன்முடி, வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு எதிரான வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தாா்.
இவா்களில் அமைச்சா் பொன்முடி, தனக்கு எதிராக தாமாக முன்வந்து தொடரப்பட்ட மறுசீராய்வு மீதான விசாரணைகளில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விலக வேண்டும் என கோரிக்கை வைத்தாா். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அடுத்த விசாரணையை கடந்த அக்டோபா் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தாா். இந்நிலையில்தா ன் கடந்த அக்டோபா் மாதம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயா்நீதிமன்றக் கிளைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டா ா்.
இதன் காரணமாக, தலைமை நீதிபதி கங்கா புா்வாலா மற்றும் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு 3 மாதங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முன்னாள் அமைச்சா் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பரபரப்பான தீா்ப்பு வழங்கினாா்.
இந்த நிலையில் 3 மாத பணியிடமாற்றத்துக்குப் பிறகு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு பணிக்குத் திரும்புகிறாா். இதனால் அவருக்கான வழக்குகளை தலைமை நீதிபதி கங்கா புா்வாலா பட்டியலிட்டுள்ளாா். அதன்படி, அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சா்கள், பொன்முடி உள்ளிட்ட முன்னாள் அமைச்சா்கள் உள்பட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் உள்ளிட்ட வழக்குகளை வரும் ஜன. 2-ம் தேதி முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.