Skip to content

நடிகர் விஜய் கட்சி பெயர் அறிவிப்பு…..

  • by Authour

சினிமாவில் இருந்து அரசியல் கட்சி தொடங்கிய பிரபலங்களின் வரலாறு தமிழக அரசியலில் ஏராளம் உண்டு. அந்த வரிசையில் நடிகர் விஜயும் விரைவில் இணைய இருக்கிறார். இந்த மாதம் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி பதிவு செய்வதாக தெரிவித்தார் . வருகிற 2026ம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக விஜய் தெரிவித்தார். இந்நிலையில் டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜயின் கட்சியின் பெயர் பதிவு செய்தார்.  விஜயின் கட்சியின் பெயரை விஜய் வௌியிட்டார்.  விஜய் கட்சியின் பெயர் ”தமிழக வெற்றி கழகம்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜயின் ரசிகர்களும், நிர்வாகிகளும் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து விஜயின் ரசிகளும் , நிர்வாகிகளும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய் அறிக்கையில் கூறியதாவது…  அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள். தமிழக வெற்றி கழகம் “விஜய் மக்கள் இயக்கம்” பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம்
தேவைப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக
சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற,
வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. மிக முக்கியமாக, அத்தகைய
அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” ( பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை
மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.
இந்நிலையில், என்னுடைய தாய் தந்தைக்கு அடுத்து எனக்கு பெயர், புகழ் மற்றும் எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ  வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். “எண்ணித் துணிக கருமம்” என்பது
வள்ளுவன் வாக்கு. அதன்படியே, “தமிழக வெற்றி கழகம்” என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து
பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும் தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!