கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் திருக்கண்மாலீஸ்வரர் கோவில் அருகே அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 15.10 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் கட்டப்பட்டு 2008 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
கட்டிடம் கட்டப்பட்டு 10 வருடங்களிலேயே கட்டிட சுவர்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு அதன் உறுதி தன்மையை இழந்து விட்டது. கோவையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் மூலம் கட்டிடம் ஆய்வு செய்யப்பட்டது பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என்று சான்று அளிக்கப்பட்டதை அடுத்து சமுதாயக்கூடகத்திடம் கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கட்டிடத்தை எடுத்து புதிய சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும் என கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் பழைய கட்டிடத்தை எடுத்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் அறிவித்திருந்தார்.
தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டை கடந்த போதிலும் பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கை பணியும் மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
மேலும் இந்த கட்டிடத்தில் யாரும் உட்காரவோ நிற்கவோ கூடாது என்ற எச்சரிக்கை அறிவிப்பை மட்டும் வைத்துள்ளனர். அருகிலுள்ள தென்கரை பாசன வாய்க்காலுக்கு பொதுமக்கள் குளிக்கவும் இந்த கட்டடத்தின்
வழியாக சென்று வருகின்றனர். அதேபோல் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அரசவல்லி தெருவில் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவறை கட்டிடமும், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும் காணப்படுகிறது எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே கட்டிடம் இடிந்து உயிர் சேதம் ஏதும் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சிபிஐஎம், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க விட்டால் பேரூராட்சி நிர்வாகத்தினை கண்டித்து போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.