தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை அருகே ஒரு கிராமப்பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். இரவு வெகு நேரம் கழித்துதான் வேலை முடிந்து திரும்புவாராம். இதனால் தனது 16 வயது மகளை பார்த்துக் கொள்வதற்காக அருகில் உள்ள தனது தோழியின் வீட்டில் தங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் நடக்கும் வார சந்தைக்கு திருச்சி மாவட்டம் தென்னூர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரியான எம். முகமது ஆசிக் (30) என்பவர் காய்கிகள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். அப்போது அந்த சிறுமிக்கும், காய்கறி வியாபாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறினர். இந்நிலையில் காய்கறி வியாபாரி முகமது ஆசிக் ஒருநாள் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமிக்கு முகமது ஆசிக் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிறுமியின் தாய் தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முகமது ஆசிக், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆசிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.