அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துக்கல்லூரி அனிதா நினைவு அரங்கத்தில் மாபெரும் தமிழ்க் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வாழ்வாங்கு வாழ்வோம் என்னும் பொருண்மையில் சொற்பொழிவாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி கருத்துகளை எடுத்துரைத்தார்.
கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும் தமிழ்ப் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ என்ற பெயரிலான பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளான 03.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022-23 மற்றும் 2023-24 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,000 கல்லூரிகளைச் சேர்ந்த ஏறத்தாழ 2 லட்சம் மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் 200 இடங்களில் சிறப்பாக நடத்தப்பட்டன. உயர்கல்வித் துறையுடன் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.
இதன் 100-வது நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் அடுத்த கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்திருக்கிறது என்றும் எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, அடுத்த கட்ட நிகழ்ச்சியானது தற்போது தொடங்கியுள்ளது. நமது தமிழ் மரபின் வளமையையும் பண்பாட்டின் செழுமையையும் சமூகச் சமத்துவத்தையும் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினரிடையே குறிப்பாகக் கல்லூரி மாணவர்களிடையே கொண்டுசேர்க்கும் வகையில் இன்றையதினம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ்ப் பெருமிதம் ஆகிய இரு கையேடுகள் வழங்கப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘நான்முதல்வன்’, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, வங்கிக் கடனுதவி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
இந்தப் பரப்புரையின் தொடர்ச்சியாக இன்றையதினம் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி பேசியதாவது,
மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியின் நோக்கம் என்னவென்றால் தமிழர்களின் நாகரிகம், பண்பாடு, அவர்களுடைய தொன்மை, வாழ்க்கை முறைகள், தமிழ் இலக்கியங்களின் சிறப்புகள், இன்றைய அறிவியல் முன்னேற்றம், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி, தொழில்துறையின் முன்னேற்றங்கள் போன்ற பல்வேறு நிலைகளில் தமிழர்களாகிய நாம் எவ்வாறு சிறந்து விளங்குகிறோம், நம்முடைய பழமையும், பெருமையும் எத்தகையது, அதனை நாம் நம் வாழ்வில் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என எடுத்துரைக்கும் வகையில் இந்த விழாவானது நடைபெறுகிறது.
உலகில் சிறந்த இலக்கியங்களுள் தமிழ் இலக்கியங்களும் ஒன்றாகும். தமிழ் மொழி என்பது மிகவும் தொன்மையானது, மிகவும் பெருமையானதாகும். சங்ககால இலக்கியங்கள் பல்வேறு மக்களின் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து காணப்படுகிறது. இலக்கியங்கள் காலத்தை காட்டுகின்ற கண்ணாடி என சொல்வார்கள். அந்த இலக்கியங்கள் தோன்றிய காலங்களில் மக்களுடைய வாழ்க்கை முறை, நாகரீகம், பண்பாடு குறித்த நிகழ்வுகளை அறிந்து கொள்ளவேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நமது நாகரிகம், பண்பாடு எவ்வாறு இருந்தது. இன்றைய காலக்கட்டத்தில் ஏற்பட்டுள்ள அறிவியல் முன்னேற்றங்கள், தகவல் தொடர்பு முன்னேற்றங்கள், கல்வி மற்றும் தொழில் புரட்சி ஆகியவற்றுடன் இணைந்து நாம் வாழ்வியல் முறையை உருவாக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மாமன்னர்கள் இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் ஆகியோரது ஆட்சிமுறை, ஜனநாயக முறை குறித்தும், அவர்களது கட்டிடக் கலை குறித்தும், அற்புதமான பொறியியல் திறன் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும். அந்தவகையில் அரசு விழாக்கள் மூலம் வரும் இளம் தலைமுறையினரிடையே இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நாமும் அதனை நோக்கி முன்னேற வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மேலும், தமிழ்நாடு அரசின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. எந்தவொரு மாணவரும் பொருளாதார சூழலின் காரணமாகவோ, பிற காரணங்களுக்காகவோ கல்வி கற்பதில் தடை ஏற்பட்டுவிடக்கூடாது, இடைநிற்றல் இருக்ககூடாது என்பதற்கான தமிழ்நாடு அரசால் நான்முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கீழடியில் கிடைத்த ஆய்வின் வாயிலாக 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பின் பயனை நம் முன்னோர்கள் அறிந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. எனவே தமிழர்களாகிய நாம் நமது தொன்மை, வாழ்வியல் நெறிமுறைகள் ஆகியவற்றை இன்று உள்ள அறிவியல் தொழில்நுட்பத்துடன் பொருத்தி வாழ்வியல் முறையோடு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி பேசினார்.
அதனைத்தொடர்ந்து வாழ்வாங்கு வாழ்வோம் என்ற தலைப்பின்கீழ் சொற்பொழிவாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேசியதாவது,
இன்றைக்கு நாம் அனைவருக்கும் கல்வி; பயிலும் வாய்ப்பு நமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதற்கு காரணம் தமிழ்நாடு அரசு. எல்லார்க்கும் எல்லாம், சமத்துவம், சமூக நீதியினை நமக்கு பெற்றுக்கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசுதான். நாம் உண்ணுகின்ற உணவானது கிராமபுறங்களில் வெயிலிலும், மழையிலும் கடின உழைப்புகளை வழங்கும் விவசாயிகளின் வியர்வை துளிகளால் உருவானதாகும். இன்று அரங்கம் முழுவதும் கல்வி கற்கும் பெண்களால் நிரம்பியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட சூழலில் இருந்து, இன்றைக்கு பெண்கள் கல்வி கற்று அரங்கம் முழுவதும் அமர்ந்திருப்பது மிகப்பெரும் சாதனையாகும்.
அறிவு புரட்சி என்ற ஒன்று உலகில் முதன்முதலில் தோன்றியது தமிழ்நாட்டில்தான். தந்தை பெரியார் அவர்கள் பெண்களுக்கு கையில் புத்தகங்களை கொடுங்கள், பெண்களுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என புரட்சிக்கொடி பிடித்தநாடு நம் தமிழ்நாடாகும். அதனை செயல்படுத்தும் வகையில் கல்விக் கண் கொடுத்த கல்வித்தந்தை காமராசர் அவர்கள் தமிழ்நாட்டில் எண்ணற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறந்து கல்வி கிடைக்க வழிவகை செய்தார். அதன் தொடர்ச்சியாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பல்வேறு கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தினார்கள். தமிழ்நாட்டை உருவாக்கிய முன்னோடிகளில் முக்கியமானவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்பதை உணர வேண்டும். இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவ நிலையங்கள், மருத்துவமனைகள் அவரது ஆட்சிக்காலத்தில் தான் கொண்டுவரப்பட்டது. வாழ்வாங்கு வாழ்வோம் என்றால் நாம் இறந்த பின்பும் நம்மைப் பற்றி இச்சமூகம் பெருமையாக பேச வேண்டும். அதற்கு நாம் சமூகத்திற்கு உரிய பங்களிப்புடன் வாழ வேண்டும் என சொற்பொழிவாளர் ஆண்டாள் பிரியதர்ஷனி பேசினார்.
அதனைத்தொடர்ந்து ‘தமிழ்ப் பெருமிதம்’ சிற்றேட்டிலுள்ள துணுக்குகளை வாசித்துச் சிறப்பாக விளக்கம் அளித்த மாணவர்களைப் பாராட்டி பெருமிதச் செல்வி / பெருமிதச் செல்வன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் நிகழ்வின் இறுதியில் வழங்கப்பட்டன. சொற்பொழிவாளர்களிடம் தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களைப் பாராட்டி கேள்வியின் நாயகி / கேள்வியின் நாயகன் எனப் பட்டம் சூட்டிச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன், அரியலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வர் சித்ரா, மாவட்ட நிலை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.