கேரளா : மாநிலத்தில் பேருந்தில் பயணித்தபோது ஒரு இளம்பெண் (ஷிம்ஜிதா முஸ்தபா) தன்னிடம் ஒரு ஆண் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். அந்த வீடியோவில் அப்பெண் அந்த ஆணை “creep” (குற்றவாளி போன்றவர்) என்று அழைத்து, பாலியல் சீண்டல் செய்ததாகக் குற்றஞ்சாட்டினார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் குற்றஞ்சாட்டப்பட்டவர் 42 வயதான தீபக் என்பவர் ஆவார். அவர் ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். வீடியோ வைரலான பிறகு சமூக வலைதளங்களில் பெரும் அவதூறு, தரக்குறைவான கருத்துகள், மனரீதியான தாக்குதல்களுக்கு ஆளானார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தீபக், உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்தச் சம்பவத்தால் பெரும் அதிர்ச்சியடைந்த தீபக்கின் குடும்பத்தினர், அந்த இளம்பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர். பெண் பகிர்ந்த வீடியோவால் தீபக் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும், அது தற்கொலைக்கு வழிவகுத்ததாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. “பெண்கள் பேருந்து, ரயில், மெட்ரோ போன்ற இடங்களில் ஆண்களை எந்த ஆதாரமும் இல்லாமல் வீடியோ எடுத்து ‘creep’ என்று குற்றஞ்சாட்டுவது தொடர்ந்து நடக்கிறது” என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் ஆண்களுக்கு எதிரான போலி குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதாகவும் கருத்துகள் எழுந்துள்ளன.
இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதால் ஏற்பட்ட மன அழுத்தம் தற்கொலைக்கு வழிவகுத்துள்ளது என்பது தற்போது விவாதமாகியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழாமல் தடுக்கவும், போலி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காவல்துறை இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது

