Skip to content

அரைகுறை ஆடையுடன் வலம் வந்த பெண் – தட்டிக்கேட்ட பெண் போலீஸ்க்கு நேர்ந்த கதி: பெங்களூருவில் பரபரப்பு

பெங்களூருவின் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் கே.ஆர். புரம் ரயில் நிலையப் பகுதியில், தாமினி என்ற மோகினி (31) என்ற இளம்பெண் அரைகுறை ஆடையுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். தனியார் நிறுவன மேலாளராகப் பணியாற்றும் இவரைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கேலி செய்தபோதும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவர் சாலையின் நடுவே நடந்து சென்றதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

அப்போது அங்குப் போக்குவரத்துப் பணியில் இருந்த லட்சுமி நரசம்மா என்ற பெண் காவலர், மோகினியிடம் சென்று இதுபோன்று ஆடை அணிந்து பொது இடத்தில் நடக்க வேண்டாம் என்றும், வாகனங்கள் வருவதால் ஓரமாகச் செல்லும்படியும் அறிவுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த மோகினி, பெண் காவலரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அவரது முடியைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளி கன்னத்தில் அறைந்துள்ளார்.மேலும், தற்காப்புக்காக லட்சுமி வைத்திருந்த லத்தியைப் பறித்து, அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் லட்சுமியின் முகம் மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓடி வந்து காவலரை மீட்டனர்.

தாக்குதலுக்குப் பின் தப்பியோடிய மோகினியைப் போலீசார் தீவிரமாகத் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். விசாரணையில், அவர் மாலத்தீவில் பள்ளிப் படிப்பையும், பெங்களூருவில் பட்டப்படிப்பையும் முடித்தவர் என்பது தெரியவந்தது. அவர் மீது அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இதே போன்ற ஒரு அரை நிர்வாணப் போராட்டச் சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ஒரு இளம்பெண் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டு காவலரைத் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!