கோவை, சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் வீட்டின் சுவர் ஏரி குதித்து திருட முயன்ற நபரை வீட்டின் உரிமையாளர் மிரட்டி பிடித்து சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சூலூர் போலீசார் வட மாநில வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம், சூலூர் கண்ணம்பாளையம் லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் தனது புதிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு, மர்ம நபர் ஒருவர் அவரது வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த மோகனுக்கு சத்தம் கேட்டு, உடனடியாக சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்த போது, மர்ம நபர் சுவர் ஏறுவது தெரியவந்தது.
இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்து, தப்பியோட முயன்ற அந்த நபரைத் துரத்திப் பிடித்தனர். சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில், குற்றவாளி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த துபக்காந்த சர்தார் மகன் திபாஸ் சர்தார் (வயது 27) என்பதும், இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிவது தெரியவந்தது.
மோகனின் புகாரின் அடிப்படையில், சூலூர் காவல் நிலைய போலீசார் திபாஸ் சர்தார் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.