திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் தொகுதி அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி (66), அவரது மனைவி காமாட்சி, அவர்களது மூத்த மகன் மணிகண்டன் (30), அவரது மனைவி சபீனா ஆகியோர் அங்கு தங்கி தோட்ட வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில், மூர்த்தியை பார்ப்பதற்காக அவரது 2-வது மகன் தங்கபாண்டி (28) நேற்று முன்தினம் வந்துள்ளார். இரவு கறிவிருந்துடன் மது அருந்தியுள்ளனர். அப்போது, மதுபோதையில் மூர்த்திக்கும், மகன் தங்கபாண்டிக்கும் மோதல் ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில், இருவரும் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் ஜீப் ஓட்டுநரும், ஆயுதப்படை காவலருமான அழகுராஜா ஆகியோர் உடனே அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சண்டையை விலக்கி விட்டனர். காயமடைந்த மூர்த்தியை மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
திடீரென தந்தை 2 மகன்களும் சேர்ந்த எஸ்.எஸ்.ஐ. யை தாக்கினர். இதைப்பார்த்த போலீஸ்காரர் தப்பி ஓடிவிட்டார். எஸ்.எஸ்.ஐ. ஓட முயன்றபோது இருட்டில் மறைந்திருந்த தங்கபாண்டி திடீரென தாக்கியதில், எஸ்.எஸ்.ஐ. நிலைகுலைந்து கீழே விழுந்தார். போதையில் இருந்த மணிகண்டன், எஸ்.எஸ்ஐயின் தலையை துண்டித்து எடுத்து விட்டார். பின்னர் தந்தை 2 மகன்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக குடிமங்கலம் போலீசார் வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையாளிகள் மூவைரயும் போலீசார் தேடத் தொடங்கினர்.இதையறிந்த தங்கபாண்டி, மூர்த்தி ஆகியோர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாலை சரண் அடைந்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் துருவி, துருவி விசாரிக்கிறார்கள். 3-வது நபரான மணிகண்டன் போலீசார் தேடிவந்தனர். எஸ்.ஐ. சரவணக்குமார் , மணிகண்டனை பிடிக்க சென்றபோது அவர் அப்போதும் சரவணக்குமாரை வெட்டிவிட்டு தப்ப முயன்றார். இதனால் எஸ்.ஐ. சரவணக்குமார் தற்காப்புக்காக சுட்டார். இதில் மணிகண்டன் அந்த இடத்திலேயே இறந்தார்.
கொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலுவுக்கு, உமா மகேஸ்வரி என்ற மனைவியும், லலித்குமார் (25) என்ற மகனும் உள்ளனர். உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள வாஞ்சிநாதன் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். தாராபுரம் பொன்னாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் உமா மகேஸ்வரி உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சண்முகவேலின் மகன் லலித்குமார் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதற்கிடையே, நேற்று பிரேதப் பரிசோதனை முடிந்து, சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, ஐ.ஜி. செந்தில்குமார், மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், உடுமலை தாராபுரம் சாலையில் உள்ள இல்லத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சண்முகவேல் உடலுக்கு தமிழக தலைமை டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார். சண்முகவேலின் மனைவி, மகனுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிபிஜி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் சண்முகவேல் உடலை சுமந்து சென்று ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றினர். மின் மயானத்தில் போலீஸார் 21 குண்டுகள் முழங்க சண்முகவேல் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அமைச்சர் மு.பெ.சாமிநாதன், எம்எல்ஏக்கள் ராதாகிருஷ்ணன் (உடுமலை), மகேந்திரன் (மடத்துக்குளம்), உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர், சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.