தஞ்சாவூர் மாவட்டம், தம்பிக்கோட்டை மேலாக்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆகாஷ் (26). திருவானைக்காவல் பகுதியிலுள்ள இருசக்கர வாகனம் விற்பனையகத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர் ஸ்ரீரங்கத்தில் இருந்து திருவானைக்காவல் நோக்கி திருவானைக்காவல் மேம்பாலத்தில் நேற்று (வியாழக்கிழமை) இரவு சென்றுகொண்டிருந்தார். மேம்பாலத்தின் இறக்கத்தில் இடதுபுறம் திரும்பும்போது பின்னால் வந்த டேங்கர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், கீழே விழுந்த ஆகாஷ் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.
தலைக்கவசம் அணிந்திருந்தும் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆகாஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார், வழக்குப் பதிந்து, லாரி டிரைவரான திருச்சி மாவட்டம், வாளாடியைச் சேர்ந்த ம.ராஜ்குமார் (36) என்பவரைக் கைது செய்து விசாரணை செ்யது வருகின்றனர்.

