பாடகி சுசித்ரா மீது ஆர்த்தி ரவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ரவி மோகன் – ஆர்த்தி தொடர்பான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இவர்களது விவாகரத்துக்கு பாடகி கெனிஷா தான் காரணம் என ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் கூறிய நிலையில் அதை ரவி மோகனும் கெனிஷாவும் மறுத்திருந்தனர். ஆனால் இருவரும் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வுக்கு ஒன்றாக ஜோடியாக தோன்றினர். இது கோலிவுட் திரையுலகத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில் பலரும் இவர்களது விவகாரம் தொடர்பாக சமூக வலைதளத்தில் தங்களது கருத்துகளையும் சிலர் யூட்யூபில் பேட்டிகளாகவும் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் பாடகி சுசித்ரா, ரவி மோகன் – கெனிஷாவுக்கு ஆதரவாகத் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் ஆர்த்தியின் தந்தை, பாடகி சுசித்ரா மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் “பாடகி சுசித்ரா, ரவி மோகன் – கெனிஷா ஆகியோருக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். மேலும் பல்வேறு நேர்காணல்களில் ஆர்த்தியின் தாயார் சுஜாதா, ரவி மோகன் – கெனிஷா ஆகியோருக்கு எதிராக பேச யூட்யூபர்களுக்கு பணம் கொடுப்பதாக பேசியிருக்கிறார். அதோடு ஆர்த்தி ஒரு தமிழ் நடிகரோடு சட்ட விரோத தொடர்பில் இருப்பதாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது போல அடிக்கடி அவதூறு கருத்துகளை திரைத்துறையினருக்கு எதிராக அவர் கூறி வருகிறார். எனவே பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் தன்னையும் தன் குடும்பத்தினரையும் துன்புறுத்தியதற்காகவும் அவதூறு பேசியதற்காகவும் சமூக ஊடகங்களில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி வருவதற்காகவும் பாடகி சுசித்ரா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகாரில் கோரிக்கை வைத்துள்ளார்.