Skip to content

மாணவிகளுக்கு கருகலைப்பு செய்த போலி டாக்டர், அரசு நர்சு கைது : கடலூரில் பகீர்

கடலூர் புதுப்பாளையத்தில்  உள்ள எஸ்.ஐ.டி. நர்சிங் பயிற்சி மையத்தில் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக மாவட்ட  எஸ்.பி. ஜெயக்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில்   மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை தலைமையிலான மருத்துவக்குழு, கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், தீபா ஆகியோர் அந்த பயிற்சி மையத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அந்த நர்சிங் பயிற்சி மையத்தை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த சிவகுருநாதன் (55), அவரது மனைவி உமாமகேஸ்வரி (40) ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்தது தெரிய வந்தது. கருக்கலைப்பு செய்வதற்கு தேவையான மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும் இருந்தது. தொடர்ந்து அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர்கள் நெல்லிக்குப்பத்தை அடுத்த வைடிப்பாக்கத்தை சேர்ந்த கலியன் மகன் மருந்து விற்பனை பிரதிநிதியான மூர்த்தி, விருத்தாசலத்தில் இதேபோல் நர்சிங் பயிற்சி மையம் நடத்தி வரும் ஸ்ரீமுஷ்ணம் கார்மாங்குடியை சேர்ந்த வீரமணி, கடலூர் அடுத்த காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை செவிலியரான மைக்கேல் ராஜ்குமார் மனைவி அபியாள், அங்கு மருந்தாளுனராக வேலை பார்த்து வரும் பெரிய காரைக்காட்டை சேர்ந்த ஆனந்தவேல் மனைவி தங்கம் ஆகியோரும்  கருகலைப்புக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

பின்னர் இது பற்றி நலப்பணிகள் இணை இயக்குனர் மணிமேகலை கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மருந்து, மாத்திரைகள், ஊசி, கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணை பரபரப்பு தகவல்கள் வெளியானது.

அதன்படி, கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த சிவகுருநாதன் பி.எஸ்சி வேளாண்மை படித்து விட்டு, டெல்லியில் சித்த மருத்துவம் படித்ததாக சான்றிதழ் பெற்றுள்ளார். அந்த சான்றிதழை வைத்து, இங்கு கடந்த 2012-ம் ஆண்டு முதல் நர்சிங் பயிற்சி மையத்தை நடத்தி வந்துள்ளார். அவரது சான்றிதழை ஆய்வு செய்தால் தான் அவர் உண்மையிலேயே சித்த மருத்துவம் படித்தாரா, அல்லது போலி சான்றிதழ் மூலம் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தாரா என்பது தெரியவரும்.

இவரது மனைவி உமாமகேஸ்வரி நர்சிங் படித்துள்ளார். இவர்கள் 2 பேரும் போலி மருத்துவம் பார்த்து, அங்கு வரும் தெரிந்த பெண்களுக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளனர்.  இவர்களுக்கு பழக்கமான மருந்து விற்பனை பிரதிநிதி மூர்த்தி, வீரமணி ஆகியோர் கருக்கலைப்புக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், மேலும் உபகரணங்களை வழங்கி உள்ளனர். மேலும் அரசு தலைமை  செவிலியர் அபியாள், மருந்தாளுனர் தங்கம் ஆகியோரும் மருத்துவம் பற்றி தெரியும் என்பதால் அவர்களும் உடந்தையாக இருந்து கருகலைப்பு செய்துள்ளனர்.

குறிப்பாக இங்கு கள்ளக்காதலில் கருவுறும் பெண்கள் தான் அதிக அளவில் வந்து, கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரிய வருகிறது. இது தவிர பள்ளி, கல்லூரி மாணவிகளும் வந்து கருகலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. கருகலைப்புக்கு வரும் பெண்களைப்பற்றி  இவர்கள் முதலில் விசாரித்து கொள்வார்கள்.   விதவைகள்,  மாணவிகள் திருமணமாகாத பெண்கள் என தெரிந்தால்,  அதிகமான ரேட்  வசூலித்து விடுவார்கள். அவர்களும் பிரச்னை  வெளியே வராமல் இருந்தால் சரி என கேட்ட பணத்தை கொடுத்து   விட்டு போய்விடுவார்கள். இப்படியாக இவர்கள் 10க்கும் அதிகமான கருகலைப்பு செய்துள்ளனர்.

இதேபோல் வீரமணி விருத்தாசலத்தில் நடத்தி வரும் நர்சிங் பயிற்சி மையத்திலும் இது போன்ற கருக்கலைப்பு சம்பவம் நடந்துள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு  என்ன நடந்தது என்பது விசாரணை முடிவில் தான் தெரியவரும்.

error: Content is protected !!