Skip to content

மதுபோதையில் பெண் காா் ஓட்டியதால் விபத்து

மும்பை காட்கோபர் எல்.பி.எஸ். மார்க் ரோட்டில் நேற்று காலை 6.30 மணியளவில் சொகுசு கார் ஒன்று திடீரென  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில் சாலை தடுப்பு சுவரை தாண்டி சென்ற கார் நடைபாதையில் ஏறி, அந்தப்பகுதியில் உள்ள ஒரு கடை மீது மோதி நின்றது. இந்த பயங்கர விபத்தில் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டு இருந்த 4 பேர் காயமடைந்தனர்.

விபத்து நடந்தவுடன் காரில் இருந்த ஒரு வாலிபர் தப்பியோடினார். காரை ஓட்டிய பெண்ணும், அவருடன் இருந்த மற்றொரு பெண்ணையும் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் காரை ஓட்டிய பெண் பாவிகா தாமா (30) மற்றும் உடன் இருந்தவர் அவரது தோழி கோரம் பானுசாலி(30) என்று தெரியவந்தது. போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது 2 பேரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் காரில் இருந்த மதுபாட்டிலை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த பெண்களுடன் பயணித்து தப்பித்து ஓடிய வாலிபரும் போதையில் இருந்துள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். அசல்பா பகுதியில் கோரம் பானுசாலியை இறக்கிவிட அவர்கள் சென்றபோது இந்த விபத்து நடந்தது தெரியவந்து உள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுபோதையில் காரை ஓட்டி வந்த பாவிகா தாமா, அவரது தோழியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

error: Content is protected !!