புதுக்கோட்டையில் சாலையின் குறுக்கே சென்ற நாயால் விபத்துக்குள்ளான இளைஞர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு, நாயால் இளைஞர் விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சி வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதி மட்டுமின்றி மாவட்ட முழுவதும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் சுற்றி திரியும் நாய்கள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரட்டி விரட்டி கடித்து தினசரி மருத்துவமனைக்கு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் படையெடுத்து சென்று வரக்கூடிய நிலையில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை விரட்டுவதாலும் சாலையின் குறிக்கே ஓடுவதாலும் வாகன ஓட்டிகள் விபத்துக்களை தினசரி சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில்ஸதான் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட டிவிஎஸ் சண்முகா நகரை சேர்ந்த பிரசாந்த் (26) என்ற இளைஞர் தனது ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு எலக்ட்ரீசியன் பணி செய்து வரக்கூடிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புதுக்கோட்டை பல்லவன்குளம் பகுதியில் எலக்ட்ரீசியன் பணி முடித்துவிட்டு அன்று காலையில் டிவிஎஸ் கார்னரிலிருந்து மேட்டுப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே சென்ற நாயால் விபத்துக்குள்ளாகி இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். சாலையில் படுகாயமடைந்து கிடந்த பிரசாந்தை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலையில் பலத்த காயமடைந்த பிரசாந்த் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாயால் ஒரு உயிரே போய்விட்டது என்றும் அதனால் இனியாவது இது போன்ற அசம்பாவிதம் நிகழாமல் இருக்க நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் அது மட்டுமின்றி நாயால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த பிரசாந்தின் தந்தை அவரது சிறு வயதிலேயே உயிரிழந்து விட்டதால் பிரசாந்தை நம்பியே அவரது குடும்பம் இருந்த நிலையில் தற்பொழுது பிரசாந்த் உயிரிழந்து விட்டதால் அவரது குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவரது நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.