திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள், அரியலூர் அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, குடலாயூத்தூர் மற்றும் காவாளக்கடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 16-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வேன் ஒன்றில் சமயபுரம் கோவிலுக்குச் சென்றுள்ளனர். வழிபாடுகளை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் அருகே வேனின் டயர் திடீரென வெடித்தது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் அன்பரசி, காவ்யா, சரிதா, சரஸ்வதி, மகேஸ்வரி, மாரியம்மாள், சௌமியா, ஜான்சி ராணி, செல்வி, கலைச்செல்வி உள்ளிட்ட 14 பெண் பக்தர்கள் படுகாயங்களுடன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இன்று காலை பெரம்பலூர் அருகே நடந்த விபத்தில் நான்கு பக்தர்கள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள், தற்போது அரியலூர் அருகே நிகழ்ந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

